கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு நல்லெண்ணத் தூதராக நடிகர் பிரசாந்த்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரசாந்த், கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு அதற்கான சிறப்பு பேட்ஜை அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அணிவித்து கௌரவித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்த தகவலை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க பைபாட் படகு போட்டி பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கேரள அரசின் முக்கிய சமூகப் பாதுகாப்பு முன்னெடுப்பான ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டத்தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் முன்னணி களப்பணியாளராக பிரசாந்த் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கான பேட்ஜ் அவருக்கு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பைபாட் படகு போட்டி, விளையாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வாக மட்டுமின்றி, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்கும் படகோட்டிகள், படகு குழுவினர், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் விளையாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்தப் போட்டி திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஆபரேஷன் டூஃபான்’ என்பது கேரளா முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading