மலையாள திரையுலகில் கவனம் பெற்ற நடிகை நிமிஷா சஜயன், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘சித்தா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர். தற்போது ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் பபிதா சிங் என்ற சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்
இந்த கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தில் பெரிய மாற்றத்தை நிமிஷா மேற்கொண்டுள்ளார். வழக்கமாக 58 கிலோ எடையுடன் இருந்த அவர், கதாபாத்திரத்தின் தேவைக்காக சுமார் 14 கிலோ எடையை அதிகரித்து 72 கிலோ வரை சென்றுள்ளார். படப்பிடிப்பை முடித்த பின்னர் மீண்டும் பழைய உடல் எடைக்குத் திரும்புவதற்காக கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த எடை குறைப்பு தனக்கு எளிதானதாக இருக்கவில்லை என்றும், உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் அது சவாலாக அமைந்ததாகவும் நிமிஷா தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தில் தனது உடற்பயிற்சியாளர் ஷிபாஸ் அலி அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
