விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கி வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘சத்ரியன்’ திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்க மார்க்கெட்டை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் சிவத்மிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சென்னையில் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி, இந்தப் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். இதனை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
தனது நீண்ட நாள் கனவு தற்போது நிஜமாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமலா, இது தனது முதல் திரைப்படம் என்பதால் இந்த வாய்ப்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
—
