நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், இளம் தலைமுறையை மையமாகக் கொண்ட காதல் கதையாக உருவாகியுள்ளது. தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது இளைஞன் காதல் கொள்வதைச் சுற்றி கதை நகர்வதாக கூறப்படுகிறது.
திருச்சியில் நடைபெற்ற ‘ஹாய்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, படத்தின் தன்மை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பார்வையில், ‘ஹாய்’ என்பது ரசிகர்களை அதிகம் அழுத்தமில்லாமல் ரசிக்க வைக்கும் ஒரு இனிமையான திரைப்படம். படம் நிறைவடையும் நேரத்தில் பார்வையாளர்களின் முகத்தில் நிச்சயம் புன்னகை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தில் அதிகப்படியான டிராமாவை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். அதேசமயம், அழகான மற்றும் மனதுக்கு நெருக்கமான அனுபவத்தை படம் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘ஹாய்’ வழக்கமான காதல் படமாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்களுக்கு ஒரு லைட்டான அனுபவத்தை கொடுக்கும் என தெரிகிறது.
தற்போதைய சூழலில் ஆக்ஷன் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதை சுட்டிக்காட்டிய நயன்தாரா, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு காதல் மற்றும் குடும்பப் படத்தை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த குறையை ‘ஹாய்’ திரைப்படம் தீர்க்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஒருமுறை பார்த்துவிட்டு கடந்து செல்லும் படமாக இல்லாமல் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வகையில் இப்படம் இருக்கும் என்றும் நயன்தாரா கூறியுள்ளார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து திரையரங்கில் ரசிக்கக்கூடிய திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளதாக அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது.
