‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு பான் இந்தியா அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள யாஷ், தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் யாஷ் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அப்போது தனது கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்த அவர், பள்ளிப் படிப்பு முடியும் வரை பணம் மற்றும் அந்தஸ்து குறித்த வேறுபாடுகளை பெரிதாக உணரவில்லை என்று கூறியுள்ளார். கல்லூரி சென்ற பிறகுதான் தனது குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கும், சக மாணவர்களின் வாழ்க்கை முறைக்கும் இடையிலான வித்தியாசம் புரிந்ததாக தெரிவித்துள்ளார். குடும்ப வருமானத்தை அதிகரிக்க தாங்கள் சிறிய மளிகைக் கடையையும் நடத்தி வந்ததாகவும், அந்தக் கடைக்கான பொருட்களை வாங்குவதற்கும் கல்லூரி செல்வதற்கும் தனது தந்தையின் பழைய ஸ்கூட்டரையே பயன்படுத்தியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மற்ற மாணவர்கள் நல்ல ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த வாகனங்களுடன் இருப்பதைப் பார்த்தபோது தனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாகவும் யாஷ் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி மற்றவர்கள் அப்படி நினைத்துவிடக் கூடாது என்ற எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், தனது பெற்றோரால் தனக்காக சொத்துகளை உருவாக்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் அனுபவத்தையும் எப்போதும் துணையாக நிற்கும் ஆதரவையும் அவர்கள் வழங்கியதாக யாஷ் குறிப்பிட்டுள்ளார். தங்களது தியாகங்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
