‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்!

பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தின் கதாநாயகி தேர்வு தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் படத்தில் இருந்து விலகினார். தற்போது அவருக்குப் பதிலாக ‘அனிமல்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

‘ஸ்பிரிட்’ படத்தை சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரர் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பிலும், டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. பிரபாஸை வைத்து உருவாகும் இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், நாயகி மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தீபிகா படுகோனே இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். அவரது நடிப்பு பிடித்திருந்த காரணத்தாலேயே படக்குழு அவரைத் தேர்வு செய்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் இடையே சுமார் ஓராண்டாகவே படத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தீபிகா தரப்பில் இருந்து சில புதிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிகப்படியான சம்பளம் கோரப்பட்டதாகவும், அதற்கு பின்னர் படப்பிடிப்பில் குறைந்த நேரமே ஒதுக்க முடியும் எனக் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, தனது சம்பளத்துடன் படத்தின் லாபத்தில் 10 சதவிகித பங்கையும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீபிகா தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகள் படக்குழுவுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தீபிகா படுகோன் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரி கதாநாயகியாக இணைக்கப்பட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பிரபாஸ் – சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading