நாகார்ஜுனாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ‘கீதாஞ்சலி’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் 1989-ல் வெளியான இந்தப் படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வரும் இப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தனது திரை வாழ்க்கையில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசிய நாகார்ஜுனா, மணிரத்னம் பல ஹீரோக்களை இப்படத்திற்காக பரிசீலித்ததாகவும், சிலர் கதையில் நடிக்க தயக்கம் காட்டிய நிலையில் தாம் துணிச்சலுடன் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த முடிவு தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கீதாஞ்சலி’ ரீ-ரிலீஸை முன்னிட்டு நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் தனது மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் குறித்தும் நாகார்ஜுனா பேசியுள்ளார். வழக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்யாமல், தானும் தனது ஆரம்ப காலங்களில் செய்ததைப் போலவே வித்தியாசமான முயற்சிகளையும் சவாலான கதாபாத்திரங்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறியுள்ளார்.
மேலும், 90-களில் ஒரு நடிகருக்கு அடுத்தடுத்து சில தோல்விகள் வந்தாலும், அதன்பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய சினிமா சூழலில் ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் அதே அளவிலான வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் நாகார்ஜுனா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
—
