கவின் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
ஜென் மார்டின் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பு கிடைத்து வருகிறது. விஷ்ணு எடவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் முதலில் வெளியாகி கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ரசகுல்லா’ என்ற இரண்டாவது பாடலும் வெளியானது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இந்நிலையில், படத்தின் மூன்றாவது பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிப்பதைச் சுற்றி கதை நகர்வதாக கூறப்படுகிறது.
டிரெய்லரில் கவின் மற்றும் நயன்தாராவின் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு, காதல், உணர்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன.’ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
