இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருப்பவர் சாய் அபயங்கர். ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ போன்ற பாடல்கள் அவரை இளம் ரசிகர்களிடம் வேகமாக கொண்டு சேர்த்தன. இந்தப் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்பட இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
திரைப்பட இசையில் அவரது முதல் முயற்சியாக அமைந்த ‘டியூட்’ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பாராட்டுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘மார்ஷல்’ உள்ளிட்ட படங்களிலும், அட்லி இயக்கும் புதிய திரைப்படத்திலும் அவர் இசையமைக்கிறார். இதுதவிர, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மற்றும் தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
திரைப்படப் பணிகளுக்கு இடையிலும் தனது இன்டீ பாடல்களை வெளியிடுவதில் சாய் அபயங்கர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் அவரது 5-வது இன்டீ பாடலாக ‘பவழ மல்லி’ சமீபத்தில் வெளியானது. விவேக் வரிகளில் உருவான இப்பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார். இதில் நடிகை கயாது லோஹருடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருந்தது பாடலுக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்த இசைப் படைப்புக்கான அறிவிப்பை சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். அவரது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’ வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இதனால் ‘ராதிமா’ பாடலின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
