பல தலைமுறைகளாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் குரலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புதிய முயற்சியை முன்னெடுத்து வருகிறார். மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் இசைப் பயணத்தை நினைவுகூரும் சிறப்பு இசை வீடியோவை அவர் உருவாக்கி வருவதுடன், அவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இசைத்துறையில் பயணித்த ஆஷா போஸ்லே, 20க்கும் அதிகமான மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரையுலகிலும் அவரது குரலில் வெளியான பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தனது 92வது வயதில் மும்பையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
இந்நிலையில், ஆஷா போஸ்லேவின் கலைப் பங்களிப்பை இந்திய அளவில் கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சல்மான்கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், கோடிக்கணக்கான ரசிகர்களால் நேசிக்கப்பட்ட ஒரு ஜாம்பவானை மற்றொரு ஜாம்பவான் கவுரவிப்பது மிகச் சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்டு ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், கமல்ஹாசன், சல்மான்கான் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் இசை வீடியோ மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதற்காக அவர்களுக்கும் தனித்தனியாக நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
—
