சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை ராஷ்மிகா மந்தனா காயமடைந்ததாக தகவல் வெளியானது. தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் ஆறு வாரங்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராஷ்மிகா சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலில் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்ததாகவும், ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்ததால் உண்மையை பகிர முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் தெரிவித்ததன்படி, அவரது வலது இடுப்பு பகுதியில் உள்ள நான்கு தசைநார்களில் ஒன்று எலும்பிலிருந்து விலகியுள்ளது. இதனால் கால்களை இயல்பாக தூக்குவதில் சிரமம் இருப்பதாகவும், ‘மைசா’ படத்தின் நடனக் காட்சி படப்பிடிப்பின்போது இந்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களில் இது மூன்றாவது காயம் என கூறிய ராஷ்மிகா, தனது உடலை ஒரு இயந்திரமாக அல்ல, மனித உடலாக கவனிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ரசிகர்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஓய்வில் இருக்கும் அவர், புதிர் விளையாட்டுகளில் நேரம் செலவிட்டு வருவதாகவும், உடற்பயிற்சி செய்ய முடியாததால் உடல் எடை கூடிவிடுமோ என்ற கவலையையும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். விரைவில் முழுமையாக குணமடைந்து ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
