நூறாவது திரைப்படம் என்ற பெருமையை எட்டியுள்ள நாகார்ஜுனா, ‘கிங் 100’ மூலம் இந்த மைல்கல்லை கொண்டாட உள்ளார். அவரது 100-வது படமான இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான முதல் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஹீரோவாக மட்டுமே தனது பயணத்தைத் தொடராமல், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் வேடங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் நாகார்ஜுனா. ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் வில்லனாகவும், தனுஷின் ‘குபேரா’ படத்தில் முன்னாள் சிபிஐ அதிகாரியாகவும் தோன்றியிருந்தார். அதேபோல், இந்தி திரைப்படமான ‘பிரம்மாஸ்திரா’விலும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
இந்த வரிசையில், மேலும் ஒரு சுவாரஸ்யமான கூட்டணி உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத், அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யாவின் சகோதரர் கார்த்தியுடன் ‘தோழா’ படத்தில் நாகார்ஜுனா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—
