அல்லு அர்ஜுன், ‘Forbes India Showstoppers 2026’ இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இதையொட்டி அந்த இதழுக்காக அவர் வழங்கிய பேட்டியில், ‘புஷ்பா’ படத்தின் வெற்றி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் உருவாக்கியதாக தெரிவித்தார். மேலும் இனி சாதாரணமான முயற்சிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்காது என்றும், சிறப்பான படைப்புகளுக்கே முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாக்ஸ் ஆபிஸ் அழுத்தம் தனக்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் சில நடிகர்களுக்கு மட்டுமே அந்த அளவிலான எதிர்பார்ப்பு கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ‘புஷ்பா 2’ படத்தில் பெண் வேடத்தில் நடித்தது தனது திரைப்பயணத்தில் மிகவும் துணிச்சலான முடிவுகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜக்கம்மா ஜாத்ரா திருவிழா காட்சிக்காக சேலை, நகைகள் அணிந்து, உடலில் நீல நிறம் பூசி பெண் தோற்றத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். ஆரம்பத்தில் இந்தக் காட்சியை செய்வதில் தனக்கு தயக்கம் இருந்ததாகவும், பின்னர் அதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்தக் காட்சியே படத்தின் முக்கியமான பகுதியாக அமையும் என்பதை உணர்ந்ததாகவும், நடிகராக இது தனக்கு சவாலான முயற்சியாக இருந்தாலும், சிறப்பாக செய்தால் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுத்தரும் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார். இயக்குநர் சுகுமாருடன் இணைந்து எடுத்த முடிவின்படி, பெண் வேடத்தில் இருந்தாலும் கதாபாத்திரத்தின் தன்மை வெளிப்பாடு மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
