தான் படித்த பள்ளிக்காக புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்த நடிகர் தனுஷ், அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் உணர்ச்சிபூர்வமாக பேசினார். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையே அவர் தனது உரையின் மையமாக வைத்தார்.
பலரை சந்திக்கும் போது, பத்தில் எட்டுப் பேருக்கு தமிழ் எழுதத் தெரியாமல் இருந்தாலும் ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது என்பதை பார்த்து வருத்தமாக இருப்பதாக அவர் கூறினார். வெளிநாட்டில் நடந்த ஒரு படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த அவர், “உங்கள் தாய்மொழிதான் முதலில் தெரிய வேண்டும்; ஆங்கிலம் என்பது கூடுதல் திறமை” என்று அங்கிருந்தவர்கள் கூறியதை நினைவுகூர்ந்தார்.
தமிழ் தெரியாததை பெருமையாகச் சொல்லக்கூடாது. தாய்மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தனது தமிழ் ஆசிரியை சித்ராவை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்த அவர், தமிழிலும் சம அளவு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். விழாவில் தன்னை கல்வி கற்பித்த ஆசிரியர்களை சந்தித்த தனுஷ், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் ஆசிரியர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். பள்ளிக்காக கட்டிடம் கட்டிக் கொடுத்ததுடன், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்திய அவரது செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
