சமீபத்தில் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலை தரும் விஷயம் என்று தெரிவித்தார்.
பொருளாதார வசதி உள்ள குடும்பங்களுக்கு குழந்தைகளை படிக்க வைக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கை இன்னும் அரசு பள்ளிகள்தான். அங்கே சேர்க்கை குறைவதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிப்பதில்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் அரசு பள்ளிகளிலும் உருவாக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
தமிழ் மொழி குறித்து பேசிய அவர், “தமிழில் என்ன சாதனை இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். தமிழ் வழியில் கல்வி கற்ற அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார். அதுவே இந்த மொழியின் வலிமையை காட்டுகிறது” என்றார்.மேலும், தாய்மொழி என்பது மனிதனின் பார்வை போன்றது. பிறமொழிகள் அந்த பார்வையை விரிவாக்கும் கருவிகள். முதலில் தாய்மொழியில் வேரூன்ற வேண்டும். அதன் பிறகு தேவைக்கேற்ப மற்ற மொழிகளையும், இந்தியையும் கற்றுக்கொள்ளலாம்” என்று வைரமுத்து வலியுறுத்தினார்.
