‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம்… இசைவெளியீட்டு விழாவில் சூர்யா டாக்!

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வம்சி தயாரித்துள்ள இந்த படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ள நிலையில், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய கதாநாயகன் சூர்யா, கோயம்புத்தூருக்கு வந்தவுடனே எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடுச்சு. நீங்க எல்லாரும் எனக்கு ரசிகர்கள் மட்டும் இல்ல; என் தம்பி, தங்கச்சி, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என் சொந்தங்கள். இவ்வளவு நேரம் பொறுமையா இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்த எல்லாருக்கும் மனசார நன்றி. ஏர்போர்ட்டிலிருந்து காத்திருந்து இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ஒரு திருவிழா மாதிரி மாற்றி வைத்திருக்கீங்க; இந்த அன்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நான் என்னோட பிறந்தநாளை கொண்டாடல. ஆனாலும் தமிழ்நாடு முழுக்க நீங்க செய்த நல்ல விஷயங்களெல்லாம் நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஆயிரக்கணக்கான பேருக்கு ரத்ததானம் கொடுத்திருக்கீங்க, குழந்தைகளுக்கு துணி வாங்கி கொடுத்திருக்கீங்க, பலருக்கு உதவி செய்திருக்கீங்க. இந்த அன்பும் மனிதநேயமும் தான் எனக்கு மிகப்பெரிய பரிசு. உங்களை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.

என் சிறுவயசு முழுக்க கோயம்புத்தூர், கிராமம், உறவுகள், வயல், வாய்க்கால், கிணறு, ஆடு மாடு, மாட்டு வண்டி இதெல்லாம் தான். ட்ரெயின்ல கோயம்புத்தூருக்கு வந்ததும், அன்னூர்ல இருந்து மாமா கார் அனுப்புவாங்க. அந்த கார்ல கிராமத்துக்கு போகும் முழு வழியிலும் ‘கரகாட்டக்காரன்’, ‘முதல் மரியாதை’ படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்தப் பாடல்களோடதான் அந்தப் பயணங்களும், அந்தக் கிராம நினைவுகளும் இன்னும் மனசுல இருக்குது. கடந்த வருடம் என் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போய் நான் விளையாடிய இடங்களையெல்லாம் காட்டினேன். அதனால்தான் ஒரு விஷயம் சொல்லணும் போல இருக்கு: ஸ்க்ரீன் டைம் கொஞ்சம் குறைச்சு, குடும்பத்தோட இன்னும் கொஞ்சம் நேரம் செலவிடுங்க. போன்ல வரும் மெமரிஸ் விட, மனசுல இருக்கும் மெமரிஸ் தான் வாழ்க்கையில நீண்ட நாள் இருக்கும்.

‘கருப்பு’ படத்துக்கு நீங்க கொடுத்த அன்புக்கு ஒரு பெரிய கட்டிப்பிடிப்பு மாதிரி நன்றி சொல்லணும். அந்த படம் வெற்றி அடைய காரணமான ரசிகர்கள், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிப்யூட்டர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், உதவி செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இப்போ 100வது நாள் விழாவுக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது; சீக்கிரம் மறுபடியும் சந்திப்போம்.‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். வம்சி சார் படம் தரமாக வரணும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்கிற தயாரிப்பாளர். நிமிஷ், நவீன், அர்ச்சனா, எல்லா பாடகர்கள், பாடலாசிரியர்கள், குறிப்பா ஜி.வி. பிரகாஷ் எல்லாரும் இந்த படத்துக்கு மனசு வைத்து வேலை செய்திருக்காங்க. ஜி.வி.யுடன் எனக்கு தம்பி மாதிரி உறவு. எப்போ வேண்டுமானாலும் பேசக்கூடிய அன்பான உறவு.

ராதிகா அக்காவுடன் இருக்கும் நினைவுகள் எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை. நான் ஆரம்பத்தில் இருந்தபோது எந்தத் தேவையும் இல்லாமல் வந்து நடித்துக் கொடுத்ததோடு, எங்கள் குடும்பத்துக்கும் உதவி செய்திருக்காங்க. மமிதா இந்த கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு; தமிழ் அழகாக பேசி டப்பிங் செய்திருக்காங்க. வெங்கி எழுதிய இந்த படம் உறவுகள், காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்ச்சி, ஹீரோ எலிவேஷன் எல்லாம் கலந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம். ஆகஸ்ட் 14 இந்த படம் உங்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு Happy Friendship Day. 28 வருஷமா என்னை கைவிடாம நிக்க வைத்தது நீங்கதான். எல்லாருக்கும் வசதி, பணம், வாய்ப்பு சமமா இருக்காது; ஆனா நம்பிக்கை இருந்தா வாழ்க்கையில நினைத்ததை அடையலாம். காதல் என்றால் அது தினமும் தொடரணும்; அதைவிட முக்கியம் மரியாதை. குறிப்பா பெண்கள் வாழ்க்கைக்காக நிறைய தியாகம் செய்றாங்க; அவர்களோட வெற்றிக்கு துணையாக நிக்கணும். உங்க எல்லாருக்கும் வெற்றி, சந்தோஷம், கனவுகள் நிறைவேறணும் என்று ஆண்டவனை வேண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading