தெலுங்கு சினிமாவை நான் விமர்சிக்கவில்லை… – இயக்குனர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்!

சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நிறத்தை வைத்து தெலுங்கில் கேலி செய்யப்பட்டதாகவும், அதனால் தமிழில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டியதாகவும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி சமீபத்தில் பேசியிருந்தார்.

“தமிழில் நிறம் ஒரு பிரச்சினை இல்லை, சுஹாஸுக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்று இயக்குநர் கூறியிருந்த கருத்து, தெலுங்கு மக்கள் குறித்து பொதுவாகக் கூறப்பட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் புரிந்துகொண்டனர். இதையடுத்து இயக்குநருக்கு எதிராக தெலுங்கு ரசிகர்கள் கருத்துகளை பதிவிடத் தொடங்கிய நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற ‘மண்டாடி’ வெற்றி விழாவில் தான் பேசியது குறித்து தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். சுஹாஸின் நிறத்தை வைத்து கேலி செய்த குறிப்பிட்ட இயக்குநரைப் பற்றியே தனது பேச்சு அமைந்ததாகவும், தெலுங்கு மக்களையோ, ரசிகர்களையோ அல்லது தெலுங்கு சினிமாவையோ குறிப்பிடும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத் நிகழ்ச்சியிலேயே இந்திய அளவில் தெலுங்கு சினிமா முன்னணியில் இருப்பதாக தான் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மண்டாடி’ படத்துக்கும் தன்னுக்கும் தெலுங்கு மக்கள் அளித்த ஆதரவை நினைவுபடுத்திய இயக்குநர், அவர்களை வேண்டுமென்றே விமர்சிக்க எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது வார்த்தைகள் வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், தெலுங்கு மக்களுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் மீதான தனது அன்பும் மரியாதையும் தொடர்ந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார். சுஹாஸுக்கு ஆதரவாக பேசும் நோக்கிலேயே அந்த கருத்தை தெரிவித்ததாகவும், ஒட்டுமொத்த தெலுங்கு மக்களையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading