ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பைப் போலவே, ‘அல்ல போலேலோ’வும் வெளியானதும் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’வில் சுராஜ் வெஞ்சரமூடு ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவர் ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிய வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
