தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக பிரபலமாக இருந்த நடிகை ஊர்வசி, தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவர், இன்னும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மகள் தேஜா லட்சுமியும் திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தற்போது கன்னட திரையுலகிலும் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். ‘புல்லி’ என்ற டார்க் காமெடி திரைப்படத்தில் நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் தேஜா லட்சுமி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக, ஊர்வசியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னட திரையுலகிற்கு திரும்பும் அவர், கதாநாயகன் புவனின் தாயாக திரையில் தோன்றுகிறார். இதன் மூலம், தாய் மற்றும் மகள் இருவரும் முதல் முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஊர்வசி, “என் மகள் தேஜா லட்சுமி கன்னட சினிமாவில் தனது பயணத்தை இந்தப் படத்தின் மூலம் தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. புவன் மற்றும் படக்குழுவினர் கதையை சொல்லுவதற்காக சென்னை வந்தபோது, உடனே அந்தக் கதையுடன் நான் இணைந்துவிட்டேன். இந்தத் திரைப்படத்தில் நான் நடித்திருக்கவில்லை என்றால், ஒரு சிறந்த வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்று உணர்ந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
