ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் அனுபவத்தை நடிகை ராஷி கண்ணா ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கும் “தர்மன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு வெளியிட்ட ராஷி கண்ணா, ரஜினிகாந்த் வழங்கிய பரிசு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “சில நேரங்களில் உண்மையான வளர்ச்சி என்பது புதிய ஒருவராக மாறுவது அல்ல; நம்முள் உருவாக்கிக் கொண்ட போலியான அடையாளங்களை விட்டுவிடுவதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது ஆன்மிகம் குறித்து இருவருக்கும் நீண்ட உரையாடல் நடந்ததாகவும், அப்போது ‘Living with the Himalayan Masters’ என்ற புத்தகத்தை ரஜினிகாந்த் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தாம் அதை படிக்கவில்லை என்று கூறியதையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே புத்தகத்தை அவர் நேரடியாக பரிசளித்தாராம்.கடந்த இரண்டு வாரங்களாக அந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் படித்து வருவதாகவும், “படித்து முடித்த பிறகு உனக்கு டெஸ்ட் வைப்பேன்” என்று ரஜினிகாந்த் நகைச்சுவையாக கூறியதாகவும் ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.
