சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் மனதில் வைத்திருக்கும் கனவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக், கதையின் மையத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தாய் – மகன் உறவு, வாழ்க்கைப் போராட்டம் மற்றும் சதுரங்கத்தைச் சுற்றியுள்ள கதைக்களம் ஆகியவற்றை மையப்படுத்தியுள்ள டிரெய்லர், வெளியானதும் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
