நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைத்தள பதிவின் மூலம் மாணவர்களுக்கு ஆதரவாகவும், கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவு தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலை விட மனிதநேயமே மேலோங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் கவலைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பொறுப்பான பதில்களை எதிர்பார்ப்பதற்கும் முழு உரிமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்வு முறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான நடைமுறைகளே அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், உண்மைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பயத்தால் அல்ல, நம்பிக்கையாலும் நீதியாலும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
