சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை சனம் ஷெட்டியும் கலந்து கொண்டு தனது கருத்துகளை வெளிப்படுத்திய நிலையில், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மேடையில் பேசிய சனம் ஷெட்டி, “இது முழுக்க முழுக்க மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம். ஒரு சாதாரண குடிமகளாக அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் நான் வந்துள்ளேன். எனக்கு முன்பாக சிலர் பேசிய கருத்துகளுடன் நான் உடன்படவில்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள்தான் கோமாளிகள்; நாங்கள் அல்ல. நான் தளபதி விஜயின் தீவிர ரசிகை. நேற்று கூட ‘ஜனநாயகன்’ முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டுத்தான் வந்தேன்” என்று கூறினார். அவரது பேச்சின் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டபோதும், தனது கருத்தை அவர் தொடர்ந்து பதிவு செய்தார்.
தொடர்ந்து அவர், “ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது; அதுதான் ஜனநாயகம். மாணவர்களின் பிரச்சினைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். யாருடைய அழைப்பும் இல்லாமல், என் விருப்பத்தில்தான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன்” என்று தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் இருந்த மைக் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மேடையில் இருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, “மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறி அழைத்தார்கள். ஆனால் நான் பேசிக்கொண்டிருந்தபோது மைக்கை எடுத்துக்கொண்டார்கள். இதுதானா ஜனநாயகம்? இது மாணவர்களுக்கான போராட்டம் போல தெரியவில்லை; அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தும் நிகழ்வாகவே தெரிகிறது. கருத்து சொல்லும் சுதந்திரம் கூட வழங்கப்படவில்லை. ஒரு திரைப்படம் பார்த்ததற்காக என்னை ஜோக்கர் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். சட்டப்படி அனுமதி பெற்று போராட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், “இந்த மேடையில் யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளை பகிரலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அவரை வெளியேற்றியதாகவோ, மைக்கை பறித்ததாகவோ கூறப்படுவது உண்மை அல்ல. அவர் வெளியே சென்று ‘இது ஜனநாயக கூட்டமே இல்லை’ என்று கூறியதால் அதற்கு விளக்கம் அளிக்கவே முயன்றோம். நல்ல நோக்கத்துடன் நடைபெறும் இந்தப் போராட்டம் குறித்து தவறான புரிதல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்த விளக்கத்தை வழங்கினோம்” என்று தெரிவித்தனர்.
—
