சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடல் மற்றும் மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவ சமூகத்தின் வாழ்க்கைச் சூழலுடன், அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையக்கருவாக கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வெளியான முதல் நாளிலேயே ‘மண்டாடி’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வரவேற்புக்கு மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயனும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில், ‘மண்டாடி’ நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், சூரியின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு இந்த வெற்றி சரியான பலன் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மேலும், நல்ல கதை எப்போதும் பெரிய வெற்றியைப் பெறும் என தெரிவித்த அவர், தனது அன்பு அண்ணன் சூரிக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
