எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்று (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகியது. விஜயின் கடைசி திரைப்படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைச் சுற்றி மேலும் ஒரு தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, தனது காட்சிகள் இறுதிப் பதிப்பில் இடம்பெறவில்லை என்று உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜயுடன் இணைந்து நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, திரையுலகில் தனது மறுபிரவேசத்திற்குப் பிறகு முதலில் ஒப்பந்தமான படம் இதுவே என்பதால், இந்தப் படத்தின் வெளியீட்டை ஒன்றரை ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயுடன் ஒரே படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே திரைத்துறைக்கு வந்த தனது நீண்டநாள் கனவாக இருந்ததாகவும் ஆனந்தி பகிர்ந்துள்ளார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அந்தக் காட்சிகள் ரசிகர்களை சென்றடையாமல் போனது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தனிப்பட்ட வருத்தத்தைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று படத்தை ரசிக்க வேண்டும் என்றும் நடிகை ஆனந்தி தனது வீடியோவின் இறுதியில் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
