நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக பயணித்த விஷால், தற்போது முதன்முறையாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ள படம் ‘மகுடம்’. அவரே இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஞ்சலி, துஷரா விஜயன், ஜான் விஜய், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் விஷால் மூன்று மாறுபட்ட தோற்றங்களில் ரசிகர்களை சந்திக்கிறார்.
படம் குறித்து பேசிய விஷால், “இதற்கு முன்பும் சில படங்களில் கோஸ்ட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அந்தப் படங்களின் பெயர்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. டைட்டில் கார்டில் இயக்குநராக என் பெயர் இடம் பெறும் முதல் படம் ‘மகுடம்’ தான். சினிமாவுக்குள் நான் நுழைந்ததே இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன். பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், நடிகர் விஜய்க்காக பல கதைகளையும் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் வாழ்க்கை என்னை நடிகனாக மாற்றிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பல ஆண்டுகளாக மனதில் இருந்த இயக்குநர் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ், ஒரு கேங்க்ஸ்டர், தீவிரமான இளையராஜா ரசிகர் என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். கேமரா முன் நடிகராகவும், பின்னால் இயக்குநராகவும் செயல்பட வேண்டியதால் பொறுப்புகள் பல மடங்கு அதிகமாக இருந்தன. படப்பிடிப்பின் போதே திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள் செய்து, எடுத்த காட்சிகளை அன்றே எடிட் செய்யும் பணியிலும் ஈடுபட்டேன். கடந்த ஒரு வருடமாக வேறு எதையும் நினைக்காமல் இந்தப் படத்திற்காக முழுமையாக உழைத்திருக்கிறேன்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
படத்தின் இறுதி 10 நிமிடங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், ஒரு மாஸ் கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் ‘மகுடம்’ படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். 1960, 1990 மற்றும் 2025 என மூன்று காலகட்டங்களை இணைக்கும் இந்தக் கதையில், அமைதியான ஒரு உலகமும் கேங்க்ஸ்டர் உலகமும் மோதும் போது யார் வெற்றி பெறுகிறார்கள், யாருக்கு ‘மகுடம்’ சூட்டப்படுகிறது என்பதே படத்தின் மையக்கரு என அவர் கூறியுள்ளார்.
—
