முதல்வர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில், விஜயுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ரேவதி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் எச்.வினோத், தனது முந்தைய பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், தனது திரைப்படங்களில் மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட படம் ‘வலிமை’ தான். அதற்கு முன் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் அஜித்துக்கு குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்ததாகவும், அந்த வெற்றிக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மாறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தனது இயல்பான பாணி வேறுபட்டிருந்தாலும், அந்த ரசிகர்களையும் கவரும் முயற்சியே ‘வலிமை’ படத்தில் இருந்ததாக விளக்கமளித்தார்.
குறிப்பாக வலிமை படத்தில் ஆக்ஷன், சமூக கருத்து, குடும்ப உறவுகள் என அனைத்தையும் ஒரே படத்தில் சமநிலைப்படுத்த முயன்றதே எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றும் அவர் கூறினார். கொரோனா கால சிக்கல்கள், முக்கியமாக திரைக்கதையின் சரியாக முழு வடிவம் பெறாதது படத்தின் குறையாக அமைந்ததாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், முந்தைய படத்தின் வெற்றியால் உருவான எதிர்பார்ப்புகளையும், தனது படைப்புத் தன்மையையும் ஒன்றாக இணைக்க முயன்றதே சவாலாக மாறியது என்றுள்ளார். மேலும் அந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், அதன் பிறகு வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் அந்த தவறுகளை பெரும்பாலும் சரிசெய்ய முடிந்தது என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
