டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களும் இளைஞர்களும் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் முயன்றபோதும், மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியது.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியதுடன், நாடு முழுவதும் பெரும் விவாதமாகவும் மாறியது. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல், திரையுலக பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் மாணவர் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
—
