தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் அசோக் செல்வன். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய அவர், பின்னர் கதாநாயகனாக வளர்ந்து தனக்கென ரசிகர்களையும் வணிக மதிப்பையும் உருவாக்கியுள்ளார். இதனால் அவரது படங்களை ஓடிடி நிறுவனங்களும் தொடர்ந்து கவனித்து வருகின்றன.
கடைசியாக ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருந்த அசோக் செல்வனுக்கு அதன் பிறகு புதிய திரைப்பட வெளியீடு எதுவும் இல்லை. இந்த நிலையில், அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தனது முந்தைய படங்கள் குறித்து பேசிய அவர், சில நல்ல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘சம்டைம்ஸ்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘தீனி’, ‘நித்தம் ஒரு வானம்’ போன்ற படங்கள் இன்னும் அதிகமாக கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு ஓடிடியில் கிடைத்த வரவேற்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “அந்தப் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வணிகத்தைப் பெறவில்லை. ஆனால் அது தரமான திரைப்படம். அதற்காக நாங்கள் நிறைய உழைத்தோம்; கதாபாத்திரமாக மாறுவதிலும் சிரமங்கள் இருந்தன. திரையரங்குகளில் படம் ஓடவில்லை என்று தெரிந்தபோது மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஓடிடியில் அந்தப் படத்தை 10 முறைக்கும் மேல் பார்த்ததாக சிலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அப்படி பார்த்தவர்கள் ஒருமுறையாவது திரையரங்கில் வந்து பார்த்திருக்கலாமே?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
