தமிழ் சினிமாவில் ‘குத்து’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா. வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தைத் தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென இடம்பிடித்தார். கன்னட திரையுலகில் ‘சான்டல்வுட் குயின்’ என அழைக்கப்பட்ட அவர், பின்னர் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தினார். 2013-ல் காங்கிரஸ் சார்பில் மண்டியா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் அரசியலில் இருந்தும் தற்காலிகமாக விலகினார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கருத்துகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வரும் திவ்யா ஸ்பந்தனா, தற்போது திருமணம் குறித்த தனது பார்வையை தெரிவித்துள்ளார். ஒருவருடைய வாழ்க்கையின் அடையாளத்தை திருமணம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை என்றும், திருமணம் செய்யாமல் இருந்தாலும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமணம் குறித்து அவர் மேலும் பேசுகையில், “எனது அடையாளத்தை திருமணம் மட்டும் தீர்மானிக்காது. திருமணம் இல்லாமலும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த முடியும். நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம். நல்ல நட்பு, ஒத்த சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் இருக்கும் பட்சத்தில் திருமணம் சிறந்த முடிவாக இருக்கலாம். ஆனால், எனக்கு பொருத்தமான ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.
