மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தின் மூலம் அறிமுகமான சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். ‘அமரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படமாக இது உருவாகிறது.
கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கடந்த ஜூன் மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதன் நடுவே கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டியும் படக்குழுவில் இணைந்துள்ளார்.
தற்போது தொடங்கியுள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மதுரையைச் சுற்றி பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான ஆக்சன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் சீமான் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.படப்பிடிப்பு தளத்தில் சீமான் கலந்து கொண்ட புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் அவர் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
—
