நடிகர் அதர்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அட்ரஸ்’ திரைப்படத்தை இயக்குநர் ராஜமோகன் இயக்கியுள்ளார். சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் இருந்த ஒரு கிராமம் தனது அதிகாரப்பூர்வ முகவரியை இழந்த சம்பவமே இந்தப் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. அந்த ஒரு நிர்வாக மாற்றத்தால் கிராம மக்கள் சந்தித்த சிக்கல்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உரிமைக்கான போராட்டம் ஆகியவை சமூகப் பின்னணியுடன் த்ரில்லர் அம்சங்கள் கலந்து திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் ‘காளி’ என்ற இளைஞர் கதாபாத்திரத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்திருக்கிறார். தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜமோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், ‘அட்ரஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைக்களமும், உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைக்கதையும் காரணமாக, இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
—
