நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
முதலில் இந்த திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதுவும் மாற்றப்பட்ட நிலையில், தற்போது வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி ‘டாக்ஸிக்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், படத்தின் புதிய பாடலாக ‘தடுமாறுதே’ வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மொழிகளிலும் வெவ்வேறு தலைப்புகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ள இந்தப் பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியுள்ளார். பாடலுடன் வெளியான வீடியோவும் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
குறிப்பாக, பாடல் வீடியோவில் நடிகை நயன்தாரா சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த காட்சியை மையமாக வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
—
