அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த விழாவில் நடிகை வடிவுக்கரசி பகிர்ந்த உணர்ச்சிகரமான அனுபவம் அனைவரையும் நெகிழச் செய்தது.
அப்போது அவர் பேசியதாவது, ‘ஒரு காலத்தில் 25 வாரம், 50 வாரம், 100 நாள், 175 நாள் என்று படங்களின் வெற்றியை கொண்டாடுவார்கள். இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த சந்தோஷம் கொஞ்சமும் குறையவில்லை. நான் பொதுவாக யூடியூப் அதிகமாக பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்கள் சொன்ன கருத்துகளையும் விமர்சனங்களையும் படித்தேன்.
டிரெய்லரை மட்டும் பார்த்தவர்கள், ‘படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்’ என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பிறகு, ‘ஒரு நிமிடம்கூட சலிப்பு இல்லாமல் முழுப் படத்தையும் ரசித்தோம்’ என்று எழுதியிருந்ததை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளுக்கு பிறகு, ‘வடிவுக்கரசி அம்மா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்று பலரும் பாராட்டியிருந்தனர். அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர், “என்னுடைய ஒரு வேண்டுகோள் மட்டும் இருக்கிறது. ‘வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்’ என்று மட்டும் எழுதாமல், ‘இவருக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்’ என்றும் சேர்த்து எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த பட வாய்ப்பை உருவாக்கும். இந்தப் படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார்கள். ஆனால் நான் இன்னும் வீட்டில்தான் இருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400 படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் நடிக்க அதே ஆர்வம் இருக்கிறது. எனக்கு சம்பாதிக்கவும் வேண்டும். ஒரு நாள் வேலை என்றாலும் பரவாயில்லை, இரண்டு நாள் வேலை என்றாலும் பரவாயில்லை… தயவு செய்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள்” என்று உருக்கமாக பேசினார்.
—
