தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள லிஸி ஆண்டனி, தற்போது தனது 75-வது திரைப்படத்தில் நடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தொழில் அதிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றிய அவர், ‘தங்க மீன்கள்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் தனி முத்திரை பதித்தார்.பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் ஆறு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் படமும் அவரது 75-வது திரைப்படமாக அமைந்துள்ளது.
குணச்சித்திர வேடங்களைத் தாண்டி கதையின் நாயகிக்கான கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வரும் லிஸி ஆண்டனி, கடந்த ஆண்டு வெளியான ‘குயிலி’ திரைப்படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் குடும்பப் பெண்ணின் வேடத்தில் அவர் கவனம் பெற்றிருந்தார். தற்போது ‘கார்க்கியின் தாய்’ திரைப்படத்தின் மூலமும் மீண்டும் கதாநாயகியாக ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்.
தனது திரைப்பயணம் குறித்து பேசிய லிஸி ஆண்டனி, எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் இந்தத் துறைக்குள் வந்ததாக தெரிவித்தார். ஷிப்பிங் துறையில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிய நிலையிலும், நடிப்பின் மீதான ஆர்வமே தன்னை திரைப்பட உலகிற்கு அழைத்து வந்ததாக கூறினார். ஆரம்ப காலங்களில் பலரும் தயக்கம் ஏற்படுத்தினாலும், தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து பயணித்ததே இன்று இந்த நிலையை அடைய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழில் மட்டும் 75 திரைப்படங்களை நிறைவு செய்திருப்பது தனக்கு மிகப்பெரிய சாதனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘கட்டா குஸ்தி’ இரண்டு பாகங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் தன்னை கொண்டு சென்றதாக அவர் கூறினார். தற்போது ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலாவின் தாயாக நடித்துவருவதாகவும், எதிர்காலத்தில் திரைப்படம் இயக்கும் ஆசையும் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘குயிலி’ படத்தைப் போலவே ‘கார்க்கியின் தாய்’ திரைப்படமும் தனது திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.
—
