இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி ஏன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பராசக்தி படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதோடு, சென்சார் தொடர்பான விவாதங்கள், மற்றொரு திரைப்படத்துடனான மோதல் போன்ற விவாதங்கள் என பல காரணங்களும் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும், இது மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். லாபத்தில் பங்கு என்ற முறை இல்லாமல் தயாரிக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிக சிரமங்களை சந்தித்திருக்க வாய்ப்பிருந்தது” என்று கூறினார்.
அவர், அதேசமயம் ‘இட்லி கடை’ எங்களுக்கு லாபம் ஈட்டிய படமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அதன் குறைந்த பட்ஜெட்டுதான். ‘பராசக்தி’யை நான் தோல்வி படமாக கருதவில்லை. அது நல்ல படம் தான். ஆனால், அதன் தயாரிப்பு செலவு மிகவும் அதிகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
