‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது வருத்தம்… மனம் திறந்த இயக்குநர் வினோத்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதலில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த படம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான காரணங்களால் தாமதமாகி தற்போது ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

ஜனநாயகன் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் வினோத், “பல தடைகளை கடந்து ‘ஜனநாயகன்’ தற்போது வெளியாகிறது. விஜய் சார்-ஐ வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஏராளமான இயக்குநர்கள் காத்திருந்தார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னை நம்பி இந்தப் பொறுப்பை கொடுத்த விஜய் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களைப் பற்றிய அக்கறை கொண்ட கதை என்பதால்தான் விஜய் இந்தப் படத்தில் நடித்தார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர்,’ஏ’ சான்றிதழ் கிடைத்தது எங்களுக்கு வருத்தம்தான். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இருந்தாலும் படம் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. தணிக்கை குழுவின் மீது எனக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை. இந்தப் படத்தின் தாமதத்திற்கு தணிக்கை வாரியம் மட்டும் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். எங்களுக்குத் தவறு நடந்திருக்கிறது என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. உண்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

அதோடு, படத்தில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. தணிக்கை குழு சொன்ன சிறிய திருத்தங்களை மட்டுமே செய்தோம். படத்தில் முன்னதாகவே செய்த அதே சைகையை தான் பின்னர் சட்டசபையிலும் செய்தார் விஜய் சார். ‘ஜனநாயகன்’ படத்தை கரூர் சம்பவத்துடன் இணைத்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. அந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்திருந்தால், அந்த இடத்தில் நானே இருந்திருப்பேன். இப்படி ஆதாரமில்லாத தகவல்களை பரப்புவது சரியல்ல. அதனை மக்கள் கூட நம்பவில்லை” என்று விளக்கமளித்தார்.

இறுதியாக, “ஜனநாயகன்’ எவ்வளவு வசூல் செய்யும் என்பது எனக்கு முக்கியமல்ல. இந்தப் படம் உருவாகும் காலத்தில் விஜய் பல சவால்களை எதிர்கொண்டார். அதையெல்லாம் மக்களும் பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு நியாயம் நடந்ததா, அநீதி நடந்ததா என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். அந்த தீர்ப்பை மக்கள் தங்களது ஆதரவாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று வினோத் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading