சண்டைக் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் பாலகிருஷ்ணா… படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தற்போது தனது 111-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரித்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மனோஜ் மஞ்சு, சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா துறைமுகப் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது மிகப்பெரிய சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டூப் கலைஞரின் உதவியை தவிர்த்து, பாலகிருஷ்ணா தாமாகவே அந்தக் காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. கால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முழங்காலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், முழங்கால் காயத்திற்குத் தேவையான மேல்சிகிச்சையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். பாலகிருஷ்ணாவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இல்லை என்றும், ரசிகர்கள் தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்கள் முழு ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், காக்கினாடாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading