“மனிதநேயமே என் அரசியல்”… ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான வன்முறைக்கு நடிகர் டொவினோ தாமஸ் கண்டனம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அமைதிப் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “சரி, தவறு என்ற பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் அமைதியாக தங்களது கோரிக்கையை முன்வைப்பவர்களை இவ்வாறு எதிர்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாளைய தலைமுறையை உருவாக்கப் போகும் இளைஞர்களின் குரலுக்கு அடக்குமுறையால் பதிலளிக்கும்போது பாதிக்கப்படுவது அவர்களே அல்ல; ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த மாணவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா? பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினார்களா? இத்தகைய நடவடிக்கைக்கு நியாயம் சொல்லும் அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், நியாயமான காரணத்திற்காக அமைதியாக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருடனும் நான் நிற்கிறேன். கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் உரிமை ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல; அதுவே ஜனநாயகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், “என்னுடைய தேசப்பற்றை சந்தேகிக்க நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றி உங்களை விட எனக்கே நன்றாக தெரியும். இது அரசியல் விவாதம் அல்ல. மதம், இனம், பிரிவினை என அனைத்தையும் கடந்து மனிதநேயத்தைப் பற்றிய விஷயம். மனிதநேயம்தான் என் அரசியல்; அமைதிதான் என் நம்பிக்கை” என தனது பதிவில் டொவினோ தாமஸ் வலியுறுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading