திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தப் படம் உருவான விதம் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
விஜய்க்காக தனியாக ஒரு புதிய கதையைத் தயாரித்து சென்றதாக தெரிவித்த வினோத், அந்தக் கதையை கேட்ட பிறகு அது மிகவும் தீவிரமானதாக இருப்பதாக விஜய் கருத்து தெரிவித்ததாக கூறினார். அதன்பின், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாக்கலாம் என்ற யோசனையை விஜய் முன்வைத்ததாகவும் அவர் விளக்கினார்.
அதன்பிறகும் தனது சொந்தக் கதையை மீண்டும் விளக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய்யை மீண்டும் சந்திக்கச் சென்றதாக வினோத் கூறினார். ஆனால், அந்த முயற்சியைத் தொடங்குவதற்கும் முன்பே, “இறுதியில் ரீமேக் செய்யும் முடிவில்தான் வரப்போகிறோம் என்றால், அதிலேயே நேரடியாக வேலை தொடங்கலாம்” என்று விஜய் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பல ஆலோசனைகளையும் விஜய் வழங்கியதாக வினோத் கூறினார். அவை அனைத்தும் பொருத்தமாக இருந்ததால், தனது முதற்கதையை ஒதுக்கிவைத்து ‘ஜனநாயகன்’ படத்தை உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
—
