நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக வெற்றிகரமாக பயணித்து வரும் சூரி, வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், அதன் பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி ரூ.25 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
