தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியானாலும், மீண்டும் சென்சார் நடைமுறைகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், சில காட்சிகளை நீக்கவும், மாற்றியமைக்கவும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற காரணத்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடியே என் பூந்தேனே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பாடலின் காட்சிகள் மற்றும் இசை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
