‘அரசன்’ படத்திற்காக புதிய கெட்டப்பில் ரெடியாகும் சிலம்பரசன்? இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் படப்பிடிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சுமார் 60 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்பில் புதிய தோற்றத்தில் நடிக்க வேண்டியிருப்பதால், சிலம்பரசன் தற்போது துபாயில் உடல் எடையை குறைக்கும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘வடசென்னை’ திரைப்படத்தின் உலகத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் வகையில் உருவாகி வரும் ‘அரசன்’, அரசியல் பின்னணியுடன் கூடிய கேங்ஸ்டர் கதையாக உருவாகி வருகிறது. இதில் சிலம்பரசனுடன் ஆன்ட்ரியா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி, கிஷோர், விக்ராந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்து வருகிறார்.

இதுவரை மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ள படப்பிடிப்பில், சிலம்பரசனின் மூன்று தோற்றங்களில் ஒன்றுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. இளம் வயது தோற்றம், 45 வயது தோற்றம் மற்றும் ‘மதுரை டைகர்’ எனும் கதாபாத்திர தோற்றம் என மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் அவர் நடித்து வருகிறார். மதுரையில் தொடங்கி வடசென்னையில் முடியும் கதைக்களத்தில், ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை கேங்ஸ்டர் உலகத்துடன் இணையும் விதமாக திரைக்கதை அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவது, உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் சிலம்பரசன் முழு கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், சுமார் 60 நிமிட காட்சிகளை வெற்றிமாறன் எடிட் செய்து தயாரிப்பாளர் தாணுவுக்கும், சிலம்பரசனுக்கும் திரையிட்டு காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற எந்த கட்ட படப்பிடிப்பிலும் விஜய் சேதுபதி பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது துபாயில் இருந்து சிலம்பரசன் விரைவில் சென்னை திரும்பவுள்ள நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் வடசென்னை செட் அமைக்கப்பட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், மிரட்டலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருவார் என்ற தகவலும் பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading