ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்து… இலக்கியத்துக்கு தனி பல்கலைக்கழகம் வேண்டும் என வலியுறுத்தல்!

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்த ஆண்டுக்கான பெறுநராக கவிஞர் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள மூன்றாவது ஞானபீட விருதாக இது அமைந்துள்ளது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருதை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீமுதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என். திவாரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு ஏற்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து பேசியதாவது, “என்னுடைய அரை நூற்றாண்டு கால எழுத்துப் பயணத்தை பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டியை எனக்கு வழங்கியுள்ளது. இந்த விருது என்னை ஓய்வெடுத்து சாய்வு நாற்காலியில் அமர வைக்காது. ஓடி வந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் இது அல்ல. மாறாக, ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் மீது விழும் இன்னொரு சாட்டையடி. அதனால் அந்தக் குதிரை இன்னும் வேகமாக ஓடும். நானும் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து இயங்குவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் அதிகமாக நியாயம் செய்யும்.

எனக்கு சில கேள்விகள் உள்ளன. இலக்கியத்திற்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசை மட்டுமே பெற்றுள்ளது. அதற்குப் பிறகு 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பின்னரும் நோபல் பரிசுக்கு தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா உருவாக்கவில்லையா? அல்லது அப்படிப்பட்ட படைப்பாளியை நோபல் குழுவினர் கண்டறியவில்லையா? ஏராளமான உலக அழகிகளை உருவாக்கிய இந்தியா, உலகம் போற்றும் கவிஞர்களை உருவாக்க மறந்துவிட்டதா?

ஒவ்வொரு தொழில்நுட்பத் துறைக்கும் தனித்தனி பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ள நாம், இலக்கியத்திற்கென்று ஒரு தனி பல்கலைக்கழகத்தை உருவாக்கக் கூடாதா? அது எப்போது உருவாகும்? என்ற கேள்விகளுடன்தான் என் ஏற்புரையை நிறைவு செய்கிறேன். இந்த விருதுக்கு என்னை தகுதியானவனாக உருவாக்கிய ஒவ்வொரு சமூக மனிதருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading