இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.டி. இமான் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஊதா கலரு ரிப்பன்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. மேலும், இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுத் தந்த முக்கிய படமாகவும் அமைந்தது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ திரைப்படத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும், அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இயக்குநர் பொன்ராம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரியோ ராஜ் தனது ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராமே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—
