மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறதா ‘ஜெயிலர் 2’ ஆடியோ லாஞ்ச்?… வெளியான புதிய தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் சிறப்புத் தோற்றங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் வழங்கவில்லை.

முதல் பாகத்தில் இடம்பெற்ற முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்திலேயே ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார். முதல் பாகம் அவரது குடும்பத்தை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான ஆக்‌ஷன் கதையாக அமைந்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் முத்துவேல் பாண்டியன் சந்திக்கும் புதிய சவால்களை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில், படத்திலிருந்து ‘ஒன் நேம்’ என்ற ஆடியோ டிராக்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறலாம் என கூறப்படுகிறது. மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒருங்கிணைத்த டத்தோ மாலிக், ‘ஜெயிலர் 2’ ஆடியோ லாஞ்சையும் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டத்தோ மாலிக், ரஜினிகாந்தை நேரில் சந்தித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading