சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், யோகி பாபு மற்றும் ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, யோகி பாபுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், ருக்மிணி வசந்த் இணைந்தது குறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
