அல்லு அர்ஜுனுக்காக சூப்பர்ஹீரோ கதை… பாசில் ஜோசப்புடன் பிரம்மாண்ட கூட்டணி?

சமீப காலமாக சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் தகவல்களில் ஒன்றாக இயக்குநர் பாசில் ஜோசப் – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி உருவாக இருப்பது அமைந்துள்ளது. மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ என்ற பிளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ திரைப்படத்தை இயக்கிய பாசில் ஜோசப், தற்போது அல்லு அர்ஜுனுக்காக புதிய சூப்பர்ஹீரோ கதையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் ஈர்த்து வரும் பாசில் ஜோசப், அல்லு அர்ஜுனுக்காக முழுக்க புதிய கதைக்களத்துடன் இந்த திரைப்படத்தை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது ‘சக்திமான்’ திரைப்படமாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மையல்ல என்றும், முற்றிலும் புதிய சூப்பர்ஹீரோ கதையை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் தற்போது உறுதியாகியுள்ளது.

கேரளாவில் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரை அங்குள்ள ரசிகர்கள் ‘மல்லு அர்ஜுன்’ என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில், ஒரு மலையாள இயக்குநருடன் அல்லு அர்ஜுன் முதன்முறையாக இணைய இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படம் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அல்லு அர்ஜுன் தனது 25-வது மைல்கல் திரைப்படத்திற்காக முன்னணி தெலுங்கு இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பான்-இந்தியா திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘ராக்கா’ திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் முதலில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் வெளியாகும் என கூறப்படுவதால், அல்லு அர்ஜுனின் அடுத்தடுத்த பான்-இந்தியா திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading