அரசியலில் இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்… முதல்வர் விஜய் குறித்து பேசிய ரோஜா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ரோஜா, பின்னர் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆந்திர சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் அவர் முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ரோஜா கூறியதாவது, “நான் ஒருபோதும் சினிமாவை விட்டு விலகிவிட்டதாக நினைத்ததில்லை. இருந்தாலும், மீண்டும் திரையுலகில் நடிக்க வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் எனக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது சினிமாதான். இந்த முறை இன்னும் வலுவாக திரும்பி வந்திருக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.

சினிமா பிரபலங்கள் மீது அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒரு விதமான பொறாமை இருக்கும். தேர்தல் பிரசாரத்துக்கு அன்போடு அழைப்பார்கள். ஆனால் அவர்கள் நேரடியாக அரசியலில் களமிறங்கினால், ஒன்றிணைந்து எதிர்க்க முயற்சிப்பார்கள். இதுபோன்ற போட்டி, பொறாமை, சதிகள் என பலவற்றை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

தமிழகத்திலேயே விஜய்க்கு நடந்ததை பாருங்கள். இப்போது அவர் முதல்-அமைச்சராகிவிட்டதால், இது சரியில்லை, அது சரியில்லை என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, அரசியலை கற்று மக்களுக்காக பல நல்ல செயல்களை செய்தவர்கள். அதுபோல, விஜய்யும் சொன்னதை செய்து காட்டினால், அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கும். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும்,” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading