‘அன்பே டயானா’ எனக்கு மறக்க முடியாத படம் – ரம்யா ரங்கநாதன்

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அன்பே டயானா’. அவருக்கு ஜோடியாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு கலாசாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் காதல் கதையாக உருவாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடைபெற்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ரம்யா ரங்கநாதன், “என் திறமையை நம்பி டயானா கதாபாத்திரத்தை இயக்குநர் பாரி இளவழகன் எனக்கு வழங்கினார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன். அதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

மேலும், “ரோஜா மேடத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறுவயதிலிருந்தே அவருடைய ரசிகையாக இருந்த நான், அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திரையில் கம்பீரமாகத் தோன்றும் அவர், நேரில் மிகவும் அன்பான மற்றும் எளிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “’அன்பே டயானா’ திரைப்படம் ஒரு நடிகையாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. டயானா கதாபாத்திரத்தில் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளேன். என் நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். பெரம்பூரின் கலாசாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் இந்தப் படம் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டும். இது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading